முதல் பரிசு பெற்ற கதை..... செவ்வந்தி (சிறுகதை ) 25.06.2023
திரு.நி.அமிருதீன் ஹசனி,
உதவிப்பேராசிரியர், தமிழாய்வுத் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி 20.
N. AMIRUDEEN, Hasani, M.A., M.Phil., NET., A.U., C.L.I.S., D.F.A., D.S.A., (Ph.D)
Assistant Professor of Tamil, Jamal Mohamed College (Autonomous),
Tiruchirappalli – 620 020. Email: amirdeen71@gmail.com
Youtube : amirvoicetamil https://amirvoice.blogspot.com
Cell : 9362940095.
----------------------------------------------------------------------------------------------------------------------------
முதல் பரிசு பெற்ற கதை
செவ்வந்தி (சிறுகதை ) 25.06.2023
(இக்கதை நற்றிணைப் பாடல் எண் : 110 ஐ தழுவி எழுதப்பட்டது)
காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த ராகவனுக்கு வயது 48
இருக்கலாம். ஆனால் பார்க்கும்போது வாட்டசாட்டமாக 40 வயது மதிக்கத்தக்க
நபராகத் தெரிவார். எப்போதும் சந்தன கலர் அரைக்கை சட்டையும், வௌ்ளை
வேஷ்டியும் கட்டியிருப்பார். நன்றாக எண்ணை தடவி அழுத்திச் சீவப்பட்ட
தலைமுடி. பெரிய அகலமான அந்த முகம் சோகத்தால் நிரம்பியிருந்தது.
ராகவன் அருகிலிருந்தவரிடம் கேட்டார்…
ஐயா, தேவம்பாளையம் போற பஸ் எப்ப வரும் ?
81ம் நம்பர் பஸ் தேவம்பாளையம் போகும்…. ஆனா அந்த பஸ் ரெண்டு மணி
நேரத்துக்கு ஒரு முறை தான் வரும். அதுக்குப் பதிலா நீங்க 45சி ல ஏறி கோயில்
பாளையத்தில் இறங்கி, அங்கிருந்து ஆட்டோ பிடித்து நீங்க தேவம்பாளையம்
போயிடலாம் என்று மூச்சுவிடாமல் பதில் சொன்னார். என்ன இருந்தாலும் கோவை
மக்கள் அல்லவா? கேட்ட கேள்விக்கு அதிகமாகவே பதில் கிடைத்தது.
ராகவன் யோசித்தார். காத்திருந்து 81ல் ஏறலாமா? அல்லது கண்ணெதிரில்
கிளம்பத் தயாராக இருக்கும் 45சி யில் ஏறலாமா? அவர் மனம் படபடத்தது. அவர்
மனம் யோசிப்பதற்குள் கால்கள் வேகமாக ஓடிச்சென்று 45சி யில் ஏறிக்கொண்டது.
பஸ்சில் கூட்டம் அவ்வளவாக இல்லை. ஜன்னல் ஓர இருக்கையை பிடித்து
அமர்ந்தார். அப்பேருந்து கிளம்புவதற்குத் தயாராக உறுமிக் கொண்டே இருந்தது.
சில வினாடிகளில் மெதுவாக பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்தது.
2
ராகவன் சுற்றும் முற்றும் பார்த்தார். வெளியே எத்தனை மக்கள்?
எங்கிருந்துதான் இவர்கள் வருகிறார்களோ தெரியவில்லை. எங்கு பார்த்தாலும்
ஒரே மக்கள் தலையாகத் தான் தெரிந்தது. ஆனால் இதெல்லாம் அவருக்கு
ஆச்சரியத்தைத் தரவில்லை. அவர் மனம் பெரிதாக ஒன்றை எதிர்பார்த்துக்
கொண்டே இருந்தது.
அதற்குள் நடத்துனர் அருகில் வந்து…. எங்க போகணும் ? என்று
கேட்க……கோயில்பாளையம் ஒரு டிக்கெட் கொடுங்க சார் , நான் ஊருக்குப் புதுசு…
ஸ்டாப் வந்தா சொல்லுங்க.. சார்..
ம், ம் என்றபடி டிக்கெட்டைத் திணித்து விட்டு, அவர் நகர்ந்து செல்ல
பேருந்து இப்போது ஜிபி சிக்னலில் நின்றது. 60 வினாடிகளுக்குள் நிறைய
வாகனங்கள் தேங்கி விட்டன. அந்த ஒரு நிமிடத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு
இளம்பெண் கைக்குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டு இருந்தாள். அப்
பெண்ணின் வயதும் உருவமும் ராகவனுக்கு செவ்வந்தியை நினைவூட்டியது.
சிலுசிலுவென அடிக்கும் காற்றில் முடிகள் படபடக்க தன் தலையை ஜன்னலில்
சாய்த்துக்கொண்டு கண்களை மூட இரு கண்களிலும் செவ்வந்தி வந்து வந்து
போய்க் கொண்டிருந்தாள். செவ்வந்தி செவ்வந்தி என்று அவர் மனம் அலைபாய்ந்து
கொண்டிருந்தது.
மருத்துவச்சி உள்ளேபோய் கால்மணி நேரம் ஆகிவிட்டது. என்ன ஆனது
என்றே தெரியவில்லை. குட்டி போட்ட பூனை போல ராகவன் முற்றத்தில் குறுக்கும்
நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார். திடீரென குழந்தையின் அலறல் சப்தம்
கேட்கவே.. ராகவன் முகத்தில் மகிழ்ச்சிக் கோடுகள். வேகமாய் கதவை திறந்தவாறு
வெளிப்பட்டாள் மருத்துவச்சி.
ஐயா உங்களுக்குத் தங்கம் போல பொண்ணு பொறந்து இருக்கு. இந்தாங்கயா
என்று அவர் கையில் அந்தக் குழந்தையை மெதுவாக வைத்தாள்.
அந்தக் கிராமத்திலேயே மிகப்பெரிய வீடு ராகவனுடையது. ஆங்கிலேயர்
காலத்தில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அந்த பண்ணை வீடுதான் அந்த ஊருக்கே
அடையாளம். வீட்டை ஒட்டிய படி பின்புறம் வாழைத்தோப்பு, தென்னந்தோப்பு,
மாந்தோப்பு என அவருடைய தோட்டம் பரந்து விரிந்திருந்தது. தோட்டத்தை
இரண்டாக பிரிப்பது போல பெரிய வாய்க்கால் சலசலவென ஓடியது. வாய்க்காலின்
3
அபரிமிதமான தண்ணீரால் அவரின் தோப்பு எப்போதும் பசுமையாகக் காட்சி தரும்.
இவ்வளவு செல்வத்திற்கும் இளவரசியாக அக்குழந்தை அவருக்குக் காட்சி தந்தது.
ராகவனுக்கு செவ்வந்திப்பூவை மிகவும் பிடிக்கும். எனவே அந்தத்தங்க
கட்டிக்கு செவ்வந்தி என பெயர் சூட்டினார். செவ்வந்தி வளரவளர அவருடைய
செல்வம் மென்மேலும் வளர்ச்சியடைந்தது. செவ்வந்தி ஒரு குட்டி தேவதையாக
அந்த பண்ணை வீட்டில் வலம் வந்தாள்.
ராகவனுக்கு எந்தக் கவலையும் இல்லை. அந்த ஒரு குறையைத் தவிர.
செவ்வந்தி பிறந்த ஒரு வருடத்திற்குள் அவர் மனைவி ராசாத்தி படுத்த
படுக்கையானாள். செய்யாத வைத்தியம் இல்லை போகாத ஊருமில்லை.
கடைசிவரை அவள் குணமாகவே இல்லை.மாண்டு போனாள். ஆனாலும் ராகவன்
இன்னொரு துணையைத் தேடிக் கொள்ளவில்லை.
அவருடைய முழு வாழ்க்கையும் செவ்வந்திக்காகவே இருந்தது. கை
தட்டினால் செவ்வந்தியைக் கவனிக்க பத்து உதவியாட்கள், வேலைக்காரப்
பெண்கள், சமையல்காரர்கள் என்று வீடே கலகலத்து கொண்டிருந்தது. அவர்
மனைவி ராசாத்தி இல்லாதது ஒரு குறையாக இருந்தாலும், செவ்வந்தி தன்
செல்லச் சிரிப்பால் இந்த உலகத்தையே மரக்கடித்துக் கொண்டிருந்தாள்.
அவள் அருகில் இருந்தால் போதும் எதுவும் தேவையில்லை என்று
சொல்லுமளவுக்கு செவ்வந்தி ராகவனுக்குள் படிந்து விட்டாள்.
செல்லமாக வளர்க்கப்பட்டதால் என்னவோ செவ்வந்தி சிறுவயதிலேயே
பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்து விட்டாள். கை நீட்டிய பொருள் கிடைத்தாக
வேண்டும். இல்லையென்றால் வீடு அதகளம் ஆகும். ராகவனுடைய எல்லை
இல்லா அன்பு செவ்வந்தியை பிடிவாதக்காரி ஆக்கிவிட்டது.
செவ்வந்தி அறிவுள்ள, சிறுமியாக இருந்தாலும் அவளிடம் குறும்புத்தனம்
அதிகமாகயிருக்கும். சாப்பிடுவது என்றாலே அவளுக்கு அலர்ஜி. அவளை
கவனித்துக் கொள்ளும் செவிலித்தாய் தங்கக் கிண்ணத்தில் தயிர் சாதத்தை
பிசைந்து எடுத்து சாப்பிடுமாறு கெஞ்சிக்கொண்டே துரத்துவாள். அவளுக்கு போக்கு
காட்டிக்கொண்டே செவ்வந்தி மாந்தோப்பில் நுழைந்து விடுவாள். செவ்வந்திக்கு
உணவூட்டுவதற்குள் அவளுக்கு ஒரு திண்டாட்டமாகிவிடும். இதையெல்லாம்
ராகவன் தூரமாய் அமர்ந்து ரசித்துக் கொண்டே இருப்பார்.
காலம் செல்லச் செல்ல எட்டாம் வகுப்பு படிக்கும்போது செவ்வந்தி பெரிய
மனுஷி ஆகிவிட்டாள். செய்தி கேட்ட ராகவன் கண்களில் கண்ணீர் ஆனந்த
4
கண்ணீராய் பொல பொலவென கொட்டியது. கிராமத்திலிருந்த 1200 பேருக்கும்
மூன்று நாட்கள் மூக்கு பிடிக்க விருந்து போட்டு அசத்திவிட்டார் ராகவன். கிராமம்
முழுக்க செவ்வந்தியைப்பற்றித் தான் பேச்சு..
பருவம் தன் வேலையைக் காட்ட ஆரம்பித்தது. ராகவனிடமிருந்து செவ்வந்தி
பிரிந்து போவாள் என அப்போது யாருக்கும் தெரியவில்லை. உள்ளூரில் உள்ள
மேல்நிலைப்பள்ளியில் நல்ல மதிப்பெண்களோடு +2 தேர்ச்சி பெற்றாள்.
கோபிசெட்டிபாளையத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்தே ஆக
வேண்டும் என அடம் பிடித்தாள். ஒருவழியாகக் கல்லூரியில் சேர்த்துவிட்டார்
ராகவன். தினமும் கல்லூரி சென்று வர தன்னிடமுள்ள அம்பாசிடர் காரை ஏற்பாடு
செய்தார். மாரிமுத்து டிரைவர் தான் கார் ஓட்டுவார்.
ஒரு நாள் ஹார்ட் அட்டாக்கில் மாரிமுத்து படுத்துவிட அவருடைய 20 வயது
மகன் அருண் கார் டிரைவர் ஆகிவிட்டான். என்ன இருந்தாலும் முதலாளி மகள்
அல்லவா? என சற்று இடைவெளியை கடைப்பிடித்து வந்தான் அருண். விதி
விட்டதா என்ன? பஞ்சும் நெருப்பும் அருகில் இருந்தால்? சொத்து, செல்வம்,
அந்தஸ்து என அனைத்தையும் தாண்டி அருண் மனதில் ஆழமாய் பதிந்து போனாள்
செவ்வந்தி.
இவர்களின் காதலை வீட்டுக்கு தெரியாமல் பொத்தி பொத்தி வளர்த்துக்
கொண்டார்கள். தெரிந்தால் அப்பா ஏற்றுக்கொள்வார் என்ற அசட்டு நம்பிக்கை
செவ்வந்திக்கு நிறையவே இருந்தது. பலாப்பழம் பழுத்தபின் வெடித்துத் தானே ஆக
வேண்டும்.
செய்தி தெரிந்து அதிர்ந்து போய்விட்டார் ராகவன். இப்படி ஆகிவிடுமோ என
முன்பே எண்ணினர். ஆனால் என் கௌரவத்திற்கும், அந்தஸ்துக்கும் செவ்வந்தி
ஒரு போதும் இழுக்கு ஏற்படுத்த மாட்டாள் என 100% நம்பினார். செவ்வந்தியின்
காதலை விட அவள் தன்னை ஏமாற்றியது தான் ராகவனுக்கு வலித்தது. இன்றைய
தேதியில் 10,12 கோடிரூபாய் சொத்துக்குச் சொந்தக்காரி ஒரு குடிசை வீட்டுப்
பையனை விரும்புவதா? அவனுடன் திருமண வாழ்வில் இணைவதா? இது
சரியாகுமா ? ஒருவேளை அருணை மாப்பிள்ளையாக ஏற்றுக்கொண்டால் ! என்
சாதிசனம் என்னபேசும்? என் கவுரவம் என்ன ஆகும்? சிந்தித்துப் பார்த்தார் ராகவன்.
இதற்கு நாம் மறுத்து விடலாம் கடைசியில் ஒருவழியாக செவ்வந்தி தாம்
பார்க்கும் பையனை கட்டிக் கொள்வாள் என தப்புக் கணக்கு போட்டுவிட்டார்
5
செவ்வந்திக்கு இரண்டு வாய்ப்புகளை கொடுத்தார். அவனை மறந்து விடு
அல்லது என்னை, இந்த சொத்தை மறந்துவிடு. பருவ வயது பயப்படாமல் பேசியது.
தந்தையின் தியாகத்தை மறந்து பேசியது.
உங்க சொத்தும் வேணாம், உங்க ஒறவும் வேணாம். என்னோட வாழ்வோ
சாவோ இந்த அருண் கூடத்தான் … …..என்றவாறு கட்டிய சேலையோடு புறப்பட்டுச்
சென்று விட்டாள். ராகவனின் வரட்டு கௌரவம் அவரை பேச விடாமல் பார்த்துக்
கொண்டது. தம் கண்ணெதிரில் செல்லமகள் செவ்வந்தி விலகிச் செல்வதை
பார்த்தும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
செவ்வந்தி போனபிறகு அந்த பண்ணை வீடு மயான அமைதியாகக்
காட்சியளித்தது. வேலையாட்கள் பேயறைந்தது போல் பயந்த முகங்களோடு
தத்தம் வேலைகளை செய்துகொண்டிருந்தனர். ஏதோ வேகத்தில் சென்று விட்டாள்
சீக்கிரம் திரும்பி வந்துவிடுவாள் என நாட்களை எண்ணிக் கொண்டிருந்தார்
ராகவன்.
துக்கம் விசாரிக்க அவ்வப்போது சிலர் வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.
செவ்வந்திய நான் பழனியில் பார்த்தேன்…. என்றனர் சிலர்.
நான் ஈரோடு தண்டுமாரியம்மன் கோயில்ல வச்சு செவ்வந்திய, அந்த
எடுபட்ட பயலோட சேர்த்து பார்த்தேன்….. என்றனர் வேறு சிலர்.
மனம் துடிதுடித்தது. நான் தவறு செய்து விட்டேனோ? ஒருவேளை அருணை
வீட்டு மாப்பிள்ளையாக்கி வைத்திருந்தால் எப்படி இருந்திருக்கும்!
வந்தவர்கள் பேசிக்கொண்டே இருக்க ராகவன் பெரும்பாலும் மௌனமாக
தான் இருப்பார். இப்படியே இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. நாட்கள் செல்லச்
செல்ல செவ்வந்தியை பார்த்தே ஆகவேண்டும் என உள்ளம் கூப்பாடு போட்டு
அழுதது.
யார் யாரோ சொன்ன முகவரிகளில் பழனி ஈரோடு திருப்பூர் கரூர் என
எல்லா இடங்களிலும் விசாரித்து விட்டார் ராகவன். அங்கெல்லாம் செவ்வந்தி
இருப்பதாகத் தெரியவில்லை. தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி பல
இடங்களிலும் ஆள் வைத்து தேடிக்கொண்டிருந்தார். அப்படி ஒருவர் கூறிய
முகவரியில் செவ்வந்தியைத் தேடி பேருந்தில் இப்போது சென்று
கொண்டிருக்கிறார் ராகவன்.
6
கோயில்பாளையம் இறங்கு இறங்கு … என்ற நடத்துனரின் சப்தம்
ராகவனின் தூக்கத்தை கலைத்தது. வெடுக்கென எழுந்து பேருந்தை விட்டு இறங்கி
சுற்றுமுற்றும் பார்த்தார். முக்கோண வடிவிலான பேருந்து நிலையத்தில்
வெளிப்புறத்தில் வரிசையாய் ஆட்டோக்கள் நின்று இருப்பதைப் பார்த்தார்.
வேகமாக ஒரு ஆட்டோ அருகில் நடந்து வந்து… தேவம்பாளையம் போகலாமா?
என கேட்டு ஆட்டோவில் ஏறி அமர்ந்தார். ஐந்து நிமிடத்தில் தேவம்பாளையம்
வந்துவிட்டது. இறங்கி ஐம்பது ரூபாயை கொடுத்து ஆட்டோவை அனுப்பிவிட்டார்.
T போன்ற சாலையில் ஒருபுறம் பேருந்து நிறுத்தம், மறுபுறம் ஒரு சிறிய
டீக்கடை. யாரிடம் விசாரிப்பது என்ற யோசனையில், சரி ஒரு டீ குடிப்போம்
என்றவாரே டீ கடைக்குள் நுழைந்தார்
ஒரு டீயை வாங்கி மெதுவாகக் குடித்துக்கொண்டு இருந்தார். கடைக்கார
பெண்மணி தயங்கி தயங்கி கேட்டார்.
நீங்க வெளியூரரா?
ஆமாங்க
இங்கே யாரு வீட்டுக்கு வந்தீங்க
அது வந்து ...வந்து…..
பயப்படாம சொல்லுங்க, இங்க அடிக்கடி சின்னஞ்சிறுசுக கல்யாணம்
பண்ணிக்கிட்டு, ஓடி வந்து குடித்தனம் நடத்தும். நீங்க யாரைத் தேடி வந்து
இருக்கீங்க?
செவ்வந்தி…...
அட நம்ம செவ்வந்தி பொண்ணையா தேடி வந்து இருக்கீங்க.அது ரொம்ப
நல்ல பொண்ணாச்சே. காசு இல்லேன்னாலும் ஒரு டீத்தண்ணி கேட்காது.
வறுமையை மறச்சு சந்தோசமா இருக்கும்.
செவ்வந்தி வீடு எந்தப்பக்கம் …?
இப்படியே நேரா போயி வலக்கைப் பக்கம் திரும்பி நின்னா ஒரு பிள்ளையார்
கோயில் வரும். அதுக்கு பின்னாடிதான் செவ்வந்தியோட குடிசை இருக்கு...
7
ரொம்ப நன்றி நான் போய் பாத்துட்டு வர்றம்மா..
கடைக்காரம்மா சொன்ன வழியில் ராகவன் வேக வேகமாக நடந்தார்.
பிள்ளையார் கோயில் பக்கமாக வந்த போது செவ்வந்தியின் சத்தம் கேட்டது.
அப்படியே அங்கிருந்த ஒரு திண்டில் அமர்ந்து அந்தத் திசையை கவனிக்க
ஆரம்பித்தார்.
காய்ந்துபோன முட்களைக் கொண்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட வேலி.
உள்ளே ஒரு ஓரத்தில் பத்துக்கு பத்து அளவில் ஓலைக்குடிசை. சற்று தள்ளி மூன்று
பக்கம் தென்னை ஓலையும் ஒரு பக்கம் சேலையும் கொண்டு அடைக்கப்பட்ட
குளியலறை. அதனருகிலேயே மூன்று கல்லை வைத்து பானையில் சோறு
சமைத்துக் கொண்டிருந்தாள் செவ்வந்தி.
ஈரமான விறகை எரிய வைக்க ஊதுகுழல் எடுத்து ஊதி ஊதிப் போராடிக்
கொண்டிருந்தாள். எப்படி செல்வத்தில் ஊறித் திளைத்த பெண் இப்போது இப்படி
வறுமையிலும் மகிழ்ச்சியாக இருக்கிறாள் ?
பண்ணைத் தோட்டத்தின் இளவரசி இங்கு குடிசை வீட்டு வேலைக்காரியாக
மாறிப் போனதை எண்ணி கனத்த இதயத்தோடு திரும்பி, பேருந்து நிறுத்தம் வந்தார்.
அவருக்காகவே 81 ஆம் எண் பேருந்து வந்துகொண்டிருந்தது. அதில் ஏறி
கோவையை நோக்கி புறப்பட்டார் செவ்வந்தியுடன் பேசாமலேயே…..
Comments
Post a Comment