பின்னூட்டம்...

*மௌலானா அமீருத்தீன் ஹசனியுடன் ஒரு நாள் ...* நண்பர் அமீருத்தீன் ஹசனி, ஜமால் முஹம்மது கல்லூரியில் தமிழ் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றிக்கொண்டிருக்கிறார். கீழக்கரை , முஹம்மத் சதக் அறக்கட்டளையின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும் செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நன்னெறி மற்றும் தீனிய்யாத் கல்வி வகுப்புகளுக்கான தொடக்க விழா- 5.8.2023 , சனிக்கிழமை அன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் *Discipline is* *Promotion* என்னும் தலைப்பில் பேருரை ஆற்ற, மௌலானா அவர்கள் நம் கல்லூரிக்கு வருகை தந்திருந்தார் . அனைத்துச் சமூகங்களைச் சார்ந்த (Muslims and others ) சுமார் 700 மாணவர்களுக்கு மத்தியில் ஒரு மணி நேரத்திற்கு மேல், அவர் உரையாற்ற வேண்டும். மூச்சிரைக்க, எதுகை மோனைகளோடு, அடுக்கு மொழித் தொடர்களோடு, தான் படித்த தமிழ் இலக்கியங்களிலிருந்தும், குர்ஆன் ஹதீஸிலிருந்தும் மேற்கோள் காட்டி எல்லோரும் பின்பற்றும் வழக்கமான பாணியில் சண்ட மாருதமாய் முழங்குவார் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். இன்றைய தேதியில் கல்லூரி மாணவர்களுக்கு ஒருவித அயற்சியை ஏற்படுத்தும் ஒரு வழி தொடர்பு சாதனம்தான் மேற் சொன்ன பிரச்சார முறை என்பதை நன்கு அறிந்திருந்த மௌலானா அவர்கள், நாங்கள் கொடுத்த அதே தலைப்பில் *தனிநபர் நடிப்பு ( Mono* *Acting ), மௌன நடிப்பு (Mime )* மற்றும் *சின்ன சின்ன மேஜிக்* *ஷோவின்* மூலம் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பார்வையாளர்களை தன் தனிப்பட்ட திறன்களால் வசியப்படுத்தி, அரங்கத்தில் அசத்திக் கொண்டிருந்தார். இரண்டு வாரங்களைக் கடந்தும் இப்போது வரை எங்கள் கல்லூரியில் மௌலானா அமீருத்தீன் ஹசனியின் நிகழ்ச்சி தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. கல்லூரியின் வரலாற்றில் மறக்க முடியா ஒரு நிகழ்வாக இது இப்போது பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ' *ஒழுக்கமே உயர்வு'* என்னும் தலைப்பின் கீழ் என்னவெல்லாம் சொல்ல முடியுமோ அவை அனைத்தையும் முற்றிலும் மாறுபட்ட முறையில் மாணவர்களோடு மாணவராக கலந்து மேடைக்கு கீழ் நின்று, உலாவி, கேள்வி எழுப்பி (Intraction ), உளவியல் பயிற்சி அளித்து (Activity ), அதில் வென்றோருக்கு பரிசளித்து அரங்கின் கடை மடையில் இருக்கும் மாணவன் வரை நிகழ்ச்சியில் உற்சாகமாக பங்கெடுக்க வைத்து ஒரு பிரமிப்பை ஏற்படுத்தி விட்டார் நண்பர் அமிரூத்தீன் ஹசனி. இந்நிகழ்ச்சி உண்டாக்கிய தாக்கங்களிலிருந்து தனிப்பட்ட முறையில் மீண்டு வருவதற்கு எனக்கும் சில நாட்கள் பிடித்தன. *மடை மாற்ற* *சிந்தனை* என்ற வார்த்தையை நான் அதிகம் பயன்படுத்தியவன். அச்சிந்தனை ஹசனிகளின் பூர்வாங்க சொத்தாக வெவ்வேறு வடிவங்களில் அசைந்துதான் கொண்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.... அமீருத்தீன் ஹசனி பாதுகாக்கப்பட வேண்டியவர். பயன்படுத்தப்பட வேண்டியவர். இன்றைய இளைய தலைமுறையின் காதுகளுக்குள் அறவே நுழைய முடியாத அறமும், ஒழுக்க விழுமியங்களும் அமீருத்தீன் வழி அவர்களின் கல்பில் கடத்தப்படட்டும். தொடர்ந்து களங்கள் அமையட்டும். வாழ்த்துவோம் மௌலானா அமீருத்தீன் ஹசனியை! வளரட்டும் இந்த சமூகம்! *நட்புடன்* *கடையநல்லூர்* *முகைதீன் அப்துல் காதிர் ஹசனி,* *கீழக்கரையிலிருந்து....* 18.08.2023

Comments

Post a Comment